“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்

“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்
“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்
Published on

காதலியைத் தேடிச் சென்று பாகிஸ்தான் சிறையில் 6 வருடங்களாக இருந்த இந்திய இளைஞர், சிறையில் இருந்து விடுதலை ஆகி தாயகம் திரும்பியுள்ளார். 

மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரி (33). என்ஜினீயரான இவர் பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்துள்ளனர். பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது.

பின்னர், அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் அந்தப் பெண். இதனால் சோகமான அன்சாரி, அந்தத் தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். 

போதிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்து, உளவு பார்க்கவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வந்ததாகக் கூறி, ராணுவ நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறை தண்டனையை வழங்கியது. 2012-ல் இருந்து அவர் ஏற்கனவே 3 வருடம் சிறையில் இருந்துள்ளார். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் நேற்று பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இந்தியா திரும்பிய அன்சாரிக்கு வாகா எல்லையில் அவரது பெற்றோர்கள், உடன் பணியாற்றியவர்கள் வரவேற்பு அளித்தனர். பெற்றோர் அன்சாரியை கட்டி தழுவி அன்பை பொழிந்தனர். இந்திய அதிகாரிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து வரவேற்றனர். அவரும் அவரது குடும்பத்தினரும் இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. 

பின்னர், வாகா எல்லையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திரும்பிய அன்சாரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். அப்போது அன்சாரியின் பெற்றோரும் உடன் சென்றனர். “நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள் மேடம்” என்று தங்களது நன்றியை சுஷ்மா சுவராஜிடம் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி, “மீண்டும் தாயகம் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. நான் தற்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன்” என்றார். “என்னுடைய மகன் நல்ல நோக்கத்திற்காக சென்றான். அன்சாரியிடம் தீய நோக்கங்கள் எதுவும் இல்லை. முதலில் காணாமல் போனவன், பின்னர் பிடிபட்டு குற்றம்சாட்டப்பட்டார். விசா இல்லாமல் அவர் சென்றிருக்கக் கூடாது. அவனது விடுதலை மனிதாபிமானத்திற்கு கிடைத்த வெற்றி” என்று அன்சாரியின் தாய் உருக்கமாக கூறினார்.

வாகா எல்லையில் அன்சாரியை அவரது பெற்றோர் கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்திய படங்களும், சுஷ்மா சுவராஜ் உடனான சந்திப்பு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com