மும்பை மாநகரத்தில் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை மாநகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மூன்றே மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. குடிசைப்பகுதிகள் நிறைந்த செம்பூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 19 பேர் இறந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநகர்ப்பகுதியான விக்ரோலியில் நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டதில் குடிசைவாழ் மக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோன்று மேலும் சில சம்பவங்களில் 4 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் இரங்கல் தெரிவித்துடன் தலா 5லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். மும்பையில் பெய்த பெருமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
நீரேற்று நிலையங்கள் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்ததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது. மின்விநியோகமும் தடைப்பட்டது. மும்பையில் கனமழை தொடரும் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.