செயின் திருடர்களை பிடிக்க டெலிவரி பாய் வேஷமிட்ட போலீஸ்: மும்பையில் நடந்த தீரன் பட சம்பவம்!

செயின் திருடர்களை பிடிக்க டெலிவரி பாய் வேஷமிட்ட போலீஸ்: மும்பையில் நடந்த தீரன் பட சம்பவம்!
செயின் திருடர்களை பிடிக்க டெலிவரி பாய் வேஷமிட்ட போலீஸ்: மும்பையில் நடந்த தீரன் பட சம்பவம்!
Published on

பெரிய பெரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் கூட எப்படியாவது விசாரணையில் சிக்கி விடுவார்கள். ஆனால் செயின் பறிப்புகளில் ஈடுபடும் திருடர்களை பிடிப்பது போலீசாருக்கு மிகுந்த சவால் வாய்ந்ததாக இருக்கும். அப்படியான சவால் நிறைந்த வேலையைதான் மும்பை போலீசார் செய்து முடித்திருக்கிறார்கள்.

அதன்படி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை டெலிவரி பாய் போல வேஷமிட்டு காத்திருந்து பிடித்த சுவாரஸ்யமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் மும்பை போலீசார்.

மும்பையின் கஸ்துர்பா மார்க் மற்றும் பங்குர் நகர் ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து மூன்று செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது பற்றி புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சங்கிலி திருடர்களை பிடிப்பதற்காக மும்பை 12ம் மண்டல டி.சி.பி. சோம்நாத் சார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓம் தொதாவர் மற்றும் ராகுல் வலுஸ்கர் ஆகிய போலீசார் களத்தில் இறங்கினர். அதன்படி, செயின் பறிப்பு திருடர்களை பிடிப்பதற்காக சுமார் 300க்கும் மேலான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் விட்டல்வாடி மற்றும் அம்பிவ்லி ஆகிய ரயில் நிலைய பார்க்கிங்கில் திருடனின் பைக் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

எப்படியும் அந்த பைக்கை எடுக்க திருடன் வந்துதானே ஆகவேண்டும் என ஸ்கெட்ச் போட்டு, உணவு டெலிவரி செய்யும் ஊழியர் போல வேடமிட்டு கிட்டத்த 3 நாட்கள் போலீசார் காத்திருந்து வேட்டையாடியிருக்கிறார்கள். அப்போது வந்த திருடன் பைக்கை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ஜாஃபர் யூசுஃப் ஜப்ரி என்ற நபரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

இதேபோல அம்பிவ்லி பகுதியில் ஃபிரோஸ் நசிர் ஷேக் என்ற நபரையும் கைது செய்திருக்கிறார்கள். கைதான இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக டி.சி.பி. சோம்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைதான இருவரும் புத்திசாலியான திருடர்களாக இருந்திருக்கிறார்கள். போலீசிடம் சிக்காமல் இருக்க குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றத்தை செய்துவிட்டு கிழக்கு அம்பிவ்லி பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு மேற்கு அம்பிவ்லி பகுதி வழியாக செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, திருடர்களை மடக்கிப் பிடிக்கும் போது கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல அம்பிவ்லி அருகே இருந்த மக்கள் பலரும் போலீசாரை தடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு வழியாக ஆட்டோவில் சென்ற போலீசார் வேகமாக ஓட்டியதால் அந்த கும்பலிடம் தப்பித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கைதான திருடர்களிடம் இருந்து இரண்டு பைக்குகள் மற்றும் தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com