மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக, சிவசேனா தலைவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து நேற்று விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான கட்டிடத்தில் மீட்புப் பணிகளில் 60-க்கும் மேற்பட்ட தேசிய மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ் தளத்தில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் புரனமைப்பு பணிகள் நடைபெற்றதில் கட்டிடம் பலவீனம் அடைந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய அந்த நர்சிங் ஹோம் சிவசேனா தலைவர் சுனில் சிதபுக்கு சொந்தமானது.
உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு மும்பை மேயர் விஸ்வநாதன் மகாதேஸ்வர் விரைந்து வந்து, கட்டிட விபத்து தொடர்பாக சிவசேனா தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதேபோல், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 15 நாட்களில் அறிக்கை தாக்க செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.