மும்பையைச் சேர்ந்த மாணவர் யாஷ் அவதேஷ் காந்தி, மூளை முடக்குவாதம், படிக்கமுடியாத நிலை மற்றும் பேச்சுக்குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர். இத்தனை தடைகளையும் கடந்து கேட் தேர்வில் 92.5 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐஐஎம் கல்வி நிலையத்தில் சேர்ந்துள்ளார்.
21 வயதாகும் மாணவர் அவதேஷ் காந்தி, மும்பையில் உள்ள மித்திபாய் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஐந்து பேரில் ஒருவராக தேர்ச்சிபெற்றார். தற்போது அவர் கேட் தேர்வில் வென்று லக்னோ ஐஐஎம் கல்வி நிலையத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்துள்ளார்.
கற்றல் குறைபாடுகளைக் கொண்ட அவர் ஸ்க்ரைபர்கள் எனப்படும் உதவியாளர்களின் துணையோடு தேர்வுகளை எழுதியுள்ளார். "எனக்கு ஐஐஎம்மில் சேர்ந்து படிப்பு என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஏனெனில் அது நாட்டில் மிகச்சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது" என்கிறார் அவதேஷ்.
கடந்த 2018ம் ஆண்டு இளநிலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே கேட் தேர்வுக்காகத் தயாராகத் தொடங்கிவிட்டாார் அவதேஷ். " விரக்தியும் வேதனையுமாக பல தருணங்கள் இருந்தன, சில சமயங்களில் அவர் தேர்வு வேண்டாம் என்றும் பின்வாங்கினார். ஆனால் அவர் தனக்குத் தானே நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டார்" என்கிறார் மாணவரின் தந்தை ராம்தாஸ் காந்தி.