இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார். மகாராஷ்டிர அரசின் சார்பில் அவருக்கு, இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் நடைபெற்றது. இந்த நிலையில், வைரத் துண்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உருவப்படம் தொண்டு நோக்கங்களுக்காக ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.’
மறைந்த ரத்தன் டாடாவின் நினைவாக ஏதாவது சிறப்பு செய்ய வேண்டும் என்ற யோசனையில் மும்பையைச் சேர்ந்த ஷைலேஷ் அச்சாரேகர் என்ற கலைஞர், அவரது உருவப்படத்தை வைரக் கற்களால் உருவாக்கினார். இதற்காக அவர், 3X4 அடி மேட் கரும்பலகையில், சுமார் 12,000 பெரிய மற்றும் சிறிய கலப்பு வகை வைரங்களைப் பயன்படுத்தி உருவாக்கினார். இதற்காக அவருக்கு ஆறு மாத உழைப்பு தேவைப்பட்டது. அவர் உருவாக்கிய இந்த படத்தை, ரத்தன் டாடாவின் பிறந்த நாளான டிசம்பர் 28ஆம் தேதி தனிப்பட்ட முறையில் பரிசளிக்கக் காத்திருந்தார். ஆனால், அதற்குள் அவருடைய எதிர்பாராத மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, தாம் உருவாக்கிய அந்த உன்னத படைப்பை தொண்டு நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் ஏலம்விட முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”துரதிர்ஷ்டவசமாக, ரத்தன் டாடா இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவரது உன்னத சிந்தனைகளை மதிக்கும் விதமாகவும், அவரது நினைவைப் போற்றும் விதமாகவும், இந்த ஓவியத்தை விற்க ஏலம்விட முடிவு செய்துள்ளோம். அதன் வருவாயை அவரது மனதிற்குப் பிடித்த நாய்களைப் பாதுகாக்கும் சில தொண்டு நிறுவனங்களுக்காக அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கைச் சேர்ந்த என்ஆர்ஐ வைரக் கடைக்காரர் கேதன் ஆர்.கக்கட், ”இதை தலைசிறந்த படைப்பு. அதன் மதிப்பு ரூபாய் 3 கோடி முதல் ரூ.5 கோடி வரை இருக்கும். இருப்பினும் முறையான ஆய்வுக்குப் பிறகுதான் சரியான புள்ளிவிவரம் தர முடியும். ரத்தன் டாடா உலகம் முழுவதும் தனது முத்திரையை பதித்துள்ளார். அவரது பங்களிப்புகளை மதிப்பிடவோ அல்லது அளவிடவோ முடியாது. ஆனால் அவர் மீதான வெகுஜனங்களின் அன்பு, வைரங்களைப் போலவே என்றென்றும் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27,000 வைரங்களுடன் மறைந்த பாலா சாகேப் தாக்கரேவின் உருவப்படத்தை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.