மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது. தொடர் மழை காரணமாக இந்தக் கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. டோக்ரி என்ற குறுகலான பகுதியில் இந்த நான்கு மாடிக்கட்டடம் அமைந்திருந்தது. பெண் ஒருவர் உட்பட 9 பேர் இடிபாடுகளில் இருந்து படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறை, காவல்துறையினர், தேசிய பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்விடத்துக்கு விரைந்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தக் கட்டடம் 100 ஆண்டுகளுக்கு பழமையானது என்றும் இங்கு குடியிருப்பவர்கள் கட்டடத்தின் மறுசீரமைப்பிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்ததாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். இந்தக் கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.