பாகிஸ்தானின் தந்தை, முகமது அலி ஜின்னாவின் மும்பை பங்களாவைக் கையகப்படுத்தும் பணியை, மத்திய வெளியுறவுத் துறை செய்துவருவதாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகமது அலி ஜின்னா, பிரிவினைக்கு முன் மும்பையில் வசித்துவந்தார். இவரது பங்களாக மும்பை, மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ளது. 2.5 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக பல்வேறு கலைநுட்பங் களும் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவை 1936 ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் செலவு செய்து கட்டினார் ஜின்னா. ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு தங்கியுள்ளனர். பிரிவினைக்கு பிறகு முகமது அலி ஜின்னா காராச்சி சென்று விட்டார்.
பின்னர் அவரது இந்த வீட்டில் பிரிட்டனைச் சேர்ந்த தூதரக அதிகாரி குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் வெளியேறிய பிறகு ஜின்னா ஹவுஸ் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
ஜின்னாவின் ஒரே மகள் டினா வாடியா, இந்த பங்களாவை சொந்தம் கொண்டாடி மும்பையில் வழக்குத் தொடர்ந்தார். ஆனா ல், வழக்கு முடிவு அவருக்கு சாதகமாக அமையவில்லை. இந்நிலையில் டினா வாடியா கடந்த வருடம் அமெரிக்காவில் காலமானார்.
இந்த பங்களாவை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தங்களின் தூதரக அலுவலகமாக இதை பயன்படுத்த இருப்பதாகவும் பாகி ஸ்தான் அரசு மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் மகாராஷ்ட்ர மாநில பாஜக எம்.எல்.ஏ மங்கள் பிரதாப் லோதா, இந்த பங்களா குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எங்கள் அமைச்சரவை அதிகாரிகள் பங்களாவை ஆய்வு செய்யும் பணியை தொடங்க உள்ளனர். பிரதமர் அலுவலகமும், இதை டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸை போல புனரமைத்து தேவையான வசதிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதனால் அந்த பங்களாவின் உரிமையை அரசுக்கு மாற்றும் வேலையை தொடங்கியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸ், ஹைதராபாத்தின் கடைசி நிஜாமான ஓஸ்மான் அலிகானின் பங்களா ஆகும். 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களாவை சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு கையகப்படுத்திக்கொண்டது. இங்கு வெளி நாட்டு அரசு பிரதிநிதிகள் சந்திக்கும் இடமாகவும் விருந்து நடக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.