மறைந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளநிலையில், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் உதவியுடன் அரியானா மாநிலம் குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், இன்று காலை 8.16 மணி அளவில் உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேதாந்தா மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மலர் வளையம் வைத்து முலாயம் சிங்குக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய மகனான அகிலேஷ் யாதவிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து முலாயம் சிங்கின் யாதவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் சைபை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையின் வாசலில் ஒன்று கூடி இருந்த சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் யமுனா நெடுஞ்சாலையில் கூடியிருந்த பொதுமக்களும் முலாயம் சிங் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முலாயம் சிங்கின் மறைவையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு முறை துக்கம் இன்று முதல் 3 நாட்களுக்கு அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில அரசும் இன்று ஒரு நாள் அரசு முறை துக்கத்தை அனுசரித்துள்ளது. இன்று மாலை முதல் நாளை மதியம் வரை முலாயம் சிங்கின் உடல் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 3 மணி அளவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது.
முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. நாளைய இறுதிச்சடங்கில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பல்வேறு மாநிலம் முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பும் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.