சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், பாஜக எம்எல்ஏவுமான அபர்ணா யாதவுக்கு உத்தரபிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் வெள்ளிக்கிழமை அளித்தார். இதனையடுத்து யோகி அரசின் பதவியேற்பு மார்ச் 15 அல்லது 21ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் அமைச்சரவை பட்டியலில் அபர்ணா யாதவ் பெயர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான அதிதி சிங்கும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளான ராஜேஷ்வர் சிங் மற்றும் அசிம் அருண் ஆகியோரை சேர்க்கவும் பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. யோகி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங்,யோகிக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஷலப் மணி திரிபாதி ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.