நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மீது சேற்றை வாரியிறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கனகவள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, காங்கிரஸ் எம்எல்ஏ-வும், முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானேவின் மகனுமான நிதேஷ் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பிரகாஷ் ஷடேகருடம் அவருடன் சென்றிருந்தார். அப்போது, பாலம் பழுதடைந்து இருந்ததால், பிரகாஷ் ஷடேகர் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் சேற்றை வாரி இறைத்தனர். அவரை அவமதிக்கும் வகையில், பாலத்தில் கட்டிப் போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவியது.
இதையடுத்து பொறியாளர் பிரகாஷ் ஷடேகர், குடால் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, நிதிஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிதிஷ் ரானேவும் அவர் ஆதரவாளர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பொறியாளர் மீது சேற்றை வாரியிறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் 17 பேரையும் 4 நாட்கள் (ஜூலை 9 வரை) போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.