டாக்டர் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி எதிர்ப்பு பேரணி நடத்தி வருகின்றனர்.
பல விவசாய சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், அரசும் விவசாயிகளை தடுக்க பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. ஹரியானாவில் செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் போலீசார் வீசினர்.
இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது தந்தைக்கு வழங்கப்பட்ட உயரிய விருதான பாரத ரத்னா விருதை கொண்டாடும் நிகழ்வில் எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், “ஹரியானாவில் விவசாயிகளுக்காக சிறைகள் தயார் செய்யப்படுகின்றன. தடுப்பணைகள் உள்ளன. விவசாயிகளைத் தடுக்க அனைத்து வகையான விஷயங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் விவசாயிகள், தவிர குற்றவாளிகள் அல்ல. நமக்கு உணவு வழங்குபவர்களிடம் நாம் பேச வேண்டும். தீர்வு காண வேண்டும். எதிர்காலத்தில் நாம் திட்டமிடும் எந்த ஒரு உத்தியிலும் விவசாயிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளை குற்ற்வாளிகளாக கருத முடியாது” என தெரிவித்தார்.