மத்திய பிரதேசத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட அம்மாநில அமைச்சர், மணமக்களை வாழ்த்திவிட்டு, மணப்பெண்களுக்கு பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.
மத்திய பிரதேசம் போபாலில் 700 ஜோடிகளுக்கு அம்மாநில அரசின் சார்பில் அமைச்சர் கோபால் பார்கவா தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் , மணமக்களை வாழ்த்திய பின், அனைத்து மணப்பெண்களுக்கும் மரத்திலான சிறிய மட்டை ஒன்றை பரிசாக வழங்கினார். அமைச்சரின் வித்தியாசமான பரிசு அந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த பேட்டில், ‘குடிப்பவர்களை அடிக்க; போலீஸ் தலையீடு கூடாது’ என எழுதப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, மேலும் 10,000 பேட்கள் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் புதிதாக மணமுடிக்கும் ஜோடிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மதுக்கடை அமைக்க பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பும் நிலையில் அமைச்சரே இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தது மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.