மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சபி கான் மற்றும் சரிகா செம். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் இருவரும் திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். மாற்று மதங்களை சேர்ந்த இருவர் தங்களின் மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கு இச்சட்டத்திம் இடமளிக்கிறது.
இந்நிலையில், திருமணத்தை எதிர்த்த குடும்பத்திடம் இருந்து, திருமணம் முடியும்வரை போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காதல் தம்பதியினர் தரப்பில், “நாங்கள் மதம் மாறமாட்டோம். திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் சரிகா ஒரு இந்துவாகவும், சபி கான் ஒரு முஸ்லீமாகவும் இருப்பார். ஒருவரின் மத நடைமுறைகளில் மற்றொருவர் தலையிடமாட்டோம்” என்று வாதிடப்பட்டது.
திருமணத்தை எதிர்த்த பெண் வீட்டார் தரப்பு வாதிடுகையில், ”சரிகா, வீட்டில் வைத்திருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இவர் மதம் மாறி திருமணம் செய்து கொள்வது, சமூகத்தில் எங்களை புறக்கணிப்புக்கு ஆளாக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதை கேட்ட மத்தியப்பிரதேசம் உயர்நீதிமன்ற நீதிபதி, “ஒரு முஸ்லீம் ஆண், உருவ வழிபாடு அல்லது நெருப்பினை வழிபடும் ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வது இஸ்லாமியர்களின் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவர்கள் திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை பதிவு செய்திருந்தாலும், முகமதிய சட்டத்தின்கீழ் (இஸ்லாமியர்களுக்கானது) இத்தகைய திருமணங்கள் செல்லுபடியாகாது. இது ஒரு முறையற்ற (ஃபாசித்) திருமணமாகவே அங்கு கருதப்படும்” என்று தெரிவித்து போலீஸ் பாதுகாப்பினை கோரிய தம்பதிகளின் வழக்கினை தள்ளுபடி செய்தார்.