மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில் கவுரண்டியைச் சேர்ந்த 36 வயதான பழங்குடியின தொழிலாளி தஷ்ரத் ராவத், ஒரு அருவருப்பான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். 3 மாதங்களுக்கு முன் நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வின் வீடியோவானது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அருவருக்கத்தக்க காட்சிகளுடன் கூடிய அந்த வீடியோவில், மனித தன்மையற்ற ஒருவர், கையில் சிகரெட் பிடித்தபடி பழங்குடியின தொழிலாளியின் முகத்தில் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். இந்த கொடூரமான சம்பவம் பல நாட்களுக்கு பிறகு இப்போதுதான் இணையதளம் வாயிலாக வெளிவந்தது.
காணொளியில் பழங்குடியின தொழிலாளியின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் நபர் பிரவேஷ் சுக்லா எனவும், அவர் பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவுடன், குற்றச்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா சேர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியானது. அதை பிரவேஷ் சுக்லாவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்ததால், இன்னும் பரபரப்பு கூடியது. மேலும் அவர் பல பாஜக கட்சி கூட்டங்களில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் பிரவேஷ் சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்தது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் அகர்வால் கூறுகையில், “பிரவேஷ் சுக்லாவுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த தொடர்பும் இல்லை. பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடூரமான செயலையும், கட்சி எப்போதும் எதிர்க்கும். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டார்.
பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லா குற்றஞ்சாட்டப்பட்ட பிரவேஷை தொகுதியை சேர்ந்தவராக தெரியும் என ஒப்புக்கொண்டாலும், அவருக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்தார். இதுகுறித்து கேதார் சுக்லா பேசுகையில், “சித்தி நகரில் இதுபோன்ற போஸ்டர்கள் இல்லை. சமூக வலைதளங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் பெயரை தவறாக பயன்படுத்தியற்காக அவர் மீது புகார் அளிப்பேன்” என்று தெரிவித்தார். மேலும் தனக்கு மூன்று பிரதிநிதிகள் இருப்பதாகவும், பிரவேஷ் அவர்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் கூறினார்.
என்ன தான் ஒருபுறம் பாஜக அரசின் மீது கண்டனங்கள் வைக்கப்பட்டாலும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தாமாகவே முன்வந்து குற்றமிழைத்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவை பிறப்பித்தார்.
முதல்வரின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக குற்றவாளி பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டியிருந்த அவருடைய வீட்டின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சௌகான் ‘குற்றமிழைக்கப்பட்ட வீடியோவை பார்த்ததிலிருந்தே என் மனம் அதிக கனத்துடன் இருக்கிறது. தஷ்ரத்தை நேரில் சந்தித்து அவருடைய வருத்தத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று பழங்குடியின தொழிலாளியை தன்னுடைய இருப்படத்திற்கே வரவழைத்த முதல்வர், பழங்குடியின தொழிலாளியை நாற்காலியில் அமரவைத்து அவருடைய காலை நீரைக்கொண்டு கழுவினார். மேலும் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்த அவர், புது துணிகளையும் வழங்கினார். மத்திய பிரதேச முதல்வரின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இச்சம்பவத்துக்குப்பின் பேசிய முதல்வர் சௌகான், “என்னை பொறுத்தவரை, ஏழைகள்தான் கடவுள். மக்களுக்கு சேவை செய்வது, கடவுளை வணங்குவதற்கு சமம். கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என நம்புகிறேன். தஷ்மத் ராவத்துக்கு நடந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன்” என்றுள்ளார்.