“ராமர் கோவில் கட்டுவது இருக்கட்டும்; வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்கள் தொகையை பாருங்க!”- ஆ.ராசா
“பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம், தமிழகத்தை ஒப்பிடும்போது மிகவும் அதிகம்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி 1972ல் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பை கொண்டு சேர்த்தார். ஆனால் 53 ஆண்டுகள் கழித்து தான் பிரதமர் மோடி 50 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கியதாக கூறுகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதத்தை பற்றி பேசினார் ஆ.ராசா. அதில், “உத்தரபிரதேசத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக உள்ளது. குஜராத்தில் அது 27% ஆக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது 12 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. தமிழகத்தை ஒப்பிடும் போது வட மாநிலங்கள் 50 ஆண்டு காலம் பின்னோக்கி இருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதாக பெருமைப்பட்டுக்கொள்பவர்கள், ஏன் வறுமைக்கோட்டை பார்க்கவில்லை?
வட மாநிலங்களில் வாழக்கூடிய மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருக்கும்பொழுதே தமிழ்நாடு குடிநீர் வடிவேல் வாரியம் அமைத்து மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கினோம்” என கூறினார்.