ஆன்லைன் மூலம் கைரேகைகளை குளோன் செய்ய கற்றுக்கொண்டு 500 பேரின் வங்கி கணக்குகளை ஹேக் செய்த குற்றத்திற்காக உத்திர பிரதேச மாநிலம் பரேலி நகரப்பகுதியை சேர்ந்த ஆறு பேர் அடங்கிய கும்பலை கைது செய்துள்ளனர் ஷாஜகான்பூர் காவல் நிலைய காவலர்கள். அவர்கள் ஹேக் செய்த வங்கி கணக்குகள் அனைத்தும் அரசு திட்டங்கள் ஆக்டிவாக உள்ள கணக்குகள் என தெரியவந்துள்ளது. பிரதம மந்திரி கிசான் சமான் யோஜனா, முதியோர் பென்ஷன் என அந்த பட்டியல் நீள்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் அங்குள்ள காண்ட் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த கவுரவ் என தெரியவந்துள்ளது. அவர் பட்டதாரியும் கூட. “ஒருவரின் கைரேகையை அச்சு அசலாக குளோன் செய்ய 5 ரூபாய் தான் செலவாகும். ஆன்லைன் மூலமாக இதை கற்றுக் கொண்டேன்” என போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அவர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 500 பேரின் குளோன் செய்யப்பட்ட கைரேகை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மாதிரியான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
“தொடர்ந்து அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் உதவி பெறும் பயனாளிகள் எங்களிடம் புகார் கொடுத்து வந்தனர். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஒரு கூட்டமாக இந்த வேலை நடப்பதை அறிந்தோம். பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை ஜன் சுவிதா கேந்திரா மூலம் எடுக்கப்பட்டதை அறிந்தோம். வங்கி கணக்கை கைரேகை மூலமாக ஹேக் செய்து பணத்தை அபேஸ் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயனாளிகள் அனைவரும் அடிப்படை கல்வி பயிலாதவர்கள். இதை தொடர்ந்து விசாரித்ததில் சிலரது பெயர் அடிப்பட்டது. அவர்களை கைது செய்த பிறகு தான் கவுரவ் இந்த குற்றத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரிந்தது. இந்த குற்றத்தில் மேலும் பல கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
கைது செய்துள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 467, 468, 472 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.