கடந்த ஆண்டு அக்டோபரைவிட இந்த ஆண்டு இந்தியாவில் அக்டோபரில் 17 லட்சத்துக்கும் அதிகமான சீனப்போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஆன்லைன் ஷாப்பிங் தரவுகள் தெரிவித்துள்ளன.
இந்திய - சீன எல்லைப் பிரச்னைகளால் 200க்கும் மேற்பட்ட சீனச் செயலிகளை இந்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், சீன தயாரிப்புகளை புறக்கணிக்கவும், ‘ஆத்மனிர்பர் பாரதத்தை’ ஆதரிக்கவும் இந்திய அரசு அழைப்பு விடுத்த போதிலும் தற்போது கிடைத்துள்ள தரவுகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தரவுகளை சேகரித்துள்ளது. அதில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. அதன்படி இந்த ஆண்டு 21 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையாகி 42% வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி விழாக்காலங்களில் பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் 3Q20-இன் தேவை அதிகரித்ததன் விளைவாகத்தான் சாத்தியமானதாகவும் அந்த தரவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சீனத் தயாரிப்புகளான சியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஓப்போ என்ற நான்கு பிராண்டுகள்தான் மக்கள்மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நான்கு பிராண்டுகளிலும் 46.07 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின. அதே இந்த ஆண்டு 17 லட்சம் அதிகமாக விற்பனையாகி மொத்தம் 63.01 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளன.
சீனத் தாக்குதலால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஜூன் மாதம் சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் நுகர்வோர் அதை பொருட்படுத்தவில்லை என்பதை இந்த மதிப்பீடுகள் காட்டுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்றவை அக்டோபரில் ‘Big Billion Days sale’, ‘Great Indian Festival’ போன்ற விழாக்கால கொண்டாட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட 70% சலுகைகளை வழங்கியதும் சீனப்பொருட்களின் விற்பனைக்கு முக்கிய காரணம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரிப்போர்ட்.