திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி நிலை நிலவுகிறது.
வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலையில் அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர்.
இரவு ஒரு மணி முதல் இலவச தரிசன நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நாளை அதிகாலை 5 மணி முதல் தரிசனம் நடைமுறை துவங்கும். எனவே கூடுதலாக பக்தர்களை இலவச தரிசனத்திற்காக அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நாளை காலை வரை பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக வரிசையில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
விஐபி பிரேக் தரிசனத்திற்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெரிசலைக் கருத்தில் கொண்டு திருமலைக்கான பயணத்தைத் திட்டமிடுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.