2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நிகழ்ந்த 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நிகழ்ந்த முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
அதேநேரம், முந்தைய 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளை விட 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 17,633 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் அது 15,269ஆக குறைந்துள்ளது.
அதேபோல, விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு குறைந்திருக்கின்றன. வாகனங்களில் பழுது, பழைய வாகனங்களை இயக்குவது, வாகனங்களில் அதிக சுமையை ஏற்றிச் செல்வது, ஓட்டுநரின் அஜாக்கிரதை போன்றைவே விபத்துக்கள் நிகழ காரணமாக கூறப்படுகின்றன.
அதேநேரம், மத்திய அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் படி, 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த 1,19,693 விபத்துக்களில், 41,537 வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவான வாகனங்கள் தான் அதிக விபத்துகளுக்கு ஆளானதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.