இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% பதிலாக 6.2% இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தனது கணிப்பை மாற்றியுள்ளது.
மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே வெளியிட்டிருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதத்தை தற்போது குறைத்துள்ளது. அதாவது மூடிஸ் நிறுவனம் சென்ற அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்று வளர்ச்சி சதவிகிதத்தை குறைத்துள்ளது. இதற்கு இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலையே காரணம் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆசியாவில் நிலவி வரும் ஏற்றுமதி குறைவும் ஆசிய நாடுகளின் நிலவும் பொருளாதார சூழலுமே காரணம் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் 2020ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் மூடிஸ் கணித்துள்ளது.
ஏற்கெனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (IMF) கணித்திருந்து. இந்தச் சூழலில் மூடிஸ் நிறுவனமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 12-18 மாதங்களில் குறையும் என்று மூடிஸ் நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.