உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் ஒரு ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை லக்னோவில் பாரதிய ஜனதாவின் தலைவர் அமித்ஷா வெளியிட்டார். 3 மற்றும் நான்காம் பிரிவு அரசு வேலைகளுக்கு நேர்காணல் ஏதுமின்றி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிப்பதுடன், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பட்டப்படிப்புக் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் 1ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளத் திருட்டைத் தடுக்க சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் 24 மணி நேர தடையற்ற மின்விநியோகம் அளிக்கப்படுவதுடன் ஏழைகளுக்கு குறைந்த மின்கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.