விலங்கினங்களில் மிகவும் வித்தியாசமானவை குரங்குகள். அவைகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வரும். அந்த வகையில் குரங்கு ஒன்று நபர் ஒருவரின் ஐபோனை வாங்கிக் கொண்டு சேட்டை செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனம் பிரசித்திபெற்றது. பிருந்தாவனத்தில்தான் கிருஷ்ணன் சிறுவயதில், மாடு கன்றுகளை மேய்த்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுண்டு. அதேநேரத்தில் இவ்விடங்களில் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகமுண்டு.
இந்த நிலையில், அங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை குரங்குகள் பிடுங்கிச் செல்லும். பின்னர், அவைகளிடமிருந்து அதைப் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் போராட வேண்டியிருக்கும். இப்படியான ஒரு நிகழ்வுதான் தற்போது நடைபெற்றுள்ளது.
சம்பவத்தன்று, குரங்கு சுற்றுலாப் பயணி ஒருவரின் ஐபோனை எடுத்துச் சென்று பிருந்தாவன மதில்மீது போய் அமர்ந்தது. ஐபோனைப் பறிகொடுத்த அந்தப் பயணி மிகுந்த கவலைக்குள்ளானார். பின்னர், அவருடன் சேர்ந்து, அந்த ஐபோனை மீட்கும் முயற்சியில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் குளிர்பான பாட்டில் ஒன்றை, அந்த குரங்கிற்குத் தூக்கிப் போடுகிறார். அதைப் பிடித்த அந்தக் குரங்கு ஐபோனை கீழே தூக்கி எறிகிறது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.