தெலங்கானா மாநிலத்தில், குரங்கை தூக்கிலிட்டு 3 பேர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் மூன்று பேர் ஒரு குரங்கை தூக்கிலிட்டு துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் வெம்சுரு மண்டலத்தில் உள்ள அம்மபாலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
சாதுப்பள்ளி வனப்பகுதி அலுவலர் ஏ. வெங்கடேஸ்வர்லு கூறுகையில், "இப்பகுதியில் உள்ள தேக்கு தோட்டத்தில் குரங்குகள் சுற்றித்திரிந்த தாக தெரிகிறது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சாது வெங்கடேஸ்வர ராவ் மற்றும் இரண்டு பேர் குரங்குகளை குச்சிகளால் விரட்ட முயன்றனர். இதில் குரங்குகளில் ஒன்று கீழே விழுந்து மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மரத்தில் தொங்கவிடும் முன்பே குரங்கு இறந்துவிட்டதாக கிராமவாசிகள் நினைத்ததாக தெரிவிக்கின்றனர். மற்ற குரங்குகளை பயமுறுத்தவே பிடிபட்ட குரங்கை கயிற்றில் தொங்க விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர்" என தெரிவித்தார்.