மத்தியப் பிரதேசம்: புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு!

மத்தியப் பிரதேச புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வுசெய்யப்பட்டு உள்ளார்.
Mohan Yadav
Mohan Yadavtwitter
Published on

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன.

இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் முதல்வராகப் பதவியேற்றுள்ளனர். எனினும், பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, இந்த 3 மாநிலங்களிலும் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வரைத் தேர்வுசெய்ய பாஜக, தலைமை மேலிடப் பொறுப்பாளர்களை நியமித்தது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணுதியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழங்குடியின தலைவரான விஷ்ணுதியோ சாய், சத்தீஸ்கர் மாநில முதல்வராக நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ. கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Mohan Yadav
3 மாநில முதல்வர் ரேஸ்: புதியவர்களுக்கு வாய்ப்பா? களமிறக்கப்பட்ட பாஜக மேலிடப் பார்வையாளர்கள்!

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வுசெய்யப்பட்டு உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் கே.லக்ஷ்மன், தேசிய செயலாளர் ஆஷா லக்ரா உள்ளிட்ட பாஜக மேலிடப் பார்வையாளர்கள் மத்தியில் முதல்வரின் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் மோகன் யாதவ் ஒருமனதாக மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், நரேந்திர சிங் தோமர் புதிய சட்டசபை சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜகதீஷ் தியோரா மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் யாதவ், “நான் கட்சியில் ஒரு சிறிய தொழிலாளி. உங்கள் அனைவருக்கும், மாநில தலைமை மற்றும் மத்திய தலைமைக்கும் நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவுடன், எனது பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எம்.பி. பதவி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய மஹுவா மொய்த்ரா

மத்தியப் பிரதேச உஜ்ஜைன் தெற்கு தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ், சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சத்தீஸ்கரில் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானும் மீண்டும் முதல்வர்களாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களின் நன்மதிப்புகளைப் பெற முடியும் என பாஜக தலைமை திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.

அதன்படி, தற்போது சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச ஆகிய இரண்டு மாநிலங்களிலும் புதிய முதல்வர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை மேலும் வலுப்படுத்தவும், உட்கட்சியில் விரிசல் வராமல் வலுவாக வைத்திருக்கவும் முடியும் என பாஜக நினைப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன. பாஜக வெற்றிபெற்ற இரண்டு மாநிலங்களில் நீண்ட இழுபறிக்குப் பின் புதிய முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் ராஜஸ்தானில் மட்டும் முதல்வர் தேர்வுசெய்யப்படாமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com