மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ்விற்கு, அம்மாநில ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான விழா போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன. தொடர்ந்து போபாலில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.