மோடி அலை மங்கிப் போய்விட்டதாகவும், ராகுல் காந்தி நாட்டுக்கு தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டதாகவும் சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் குஜராத் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம், டிசம்பரில் நடைபெறவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாட்டுக்கு தலைமையேற்கும் தகுதி வந்துவிட்டதாகவும், பாஜகவால் நாடே அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், மோடி அலை மங்கிப் போய்விட்டதாகவும் கூறினார். அதே போல், ராகுல் காந்தியை சமூக வலைத்தளங்களில் ‘பப்பு’ என்று விமர்சிப்பது தவறு எனவும் அவர் கூறினார். மேலும், நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் பலம் என்பது மக்கள்தான். அதாவது வாக்காளர்கள். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ‘பப்பு’ ஆக்கிவிடுவார்கள். அதனால் ராகுல் காந்தியை அவ்வாறு அழைக்கத் தேவையில்லை என்றார்.
உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில், தொடர்ச்சியாக பாஜகவை விமர்சித்து வருகின்றது. குஜராத் மாநிலத்தில் ஹர்திக் படேல் தலைமையில் நடந்த, ‘படேல் இடஒதுக்கீடு போராட்ட’த்திற்கும் சிவசேனா ஆதரவளித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹர்திக் படேல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை மும்பையில் நேரில் சந்தித்து நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.