கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கூட்டாக முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் கொரோனாவின் கோரப்பிடிக்கு இறந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்து ஈரானில்தான் அதிகளவு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. சவுதி அரேபியாவை தவிர மற்ற அனைத்து வளைகுடா நாடுகளிலும் கொரோனா மரணங்கள் அரங்கேறியிருக்கின்றன.
இந்த நோய் தொற்று இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆக்ராவில் மட்டும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதை தடுத்த கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவிதமான ஹோலி கொண்டாட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹோலி கொண்டாட்டத்தின்போது அதிக அளவு மக்கள் ஒன்றாக கூடி இனிப்புகளை வழங்கி கொள்வது, வண்ணப்பொடிகளை பூசிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சுகாதார வல்லுநர்களின் அறிவுறுத்தலையடுத்து இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.