பிரதமர் மோடி, கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் வரும் 8ஆம் தேதி வழிபட உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து 2 வது முறையாக மோடி கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு வரும் 8ஆம் தேதி வருகிறார். அவரது வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மதியம் நடைபெறும் உச்ச கால பூஜையில் மோடி பங்கேற்பார் என்றும் கோவிலில் அவர் 45 நிமிடங்கள் இருப்பார் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலில் வழிபடுவதை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்க மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோடி பிரதமராக பெறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் தென்னிந்தியப் பயணம் இது.