பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில் இதுவரை 1 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பான கேள்வியை எம்பி ஒருவர் மக்களவையில் கேட்டிருந்தார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபூல் சுப்பிரியோ எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வளர்ச்சி திட்டங்களுக்காக 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றில் கடந்த 2018-19ஆம் ஆண்டு காலளவில் அதிகபட்சமாக 26.9 லட்ச மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
அதேபோல 2014-15ஆம் ஆண்டு 23.3 லட்ச மரங்களும், 2015-16ஆம் ஆண்டு 17.01 லட்ச மரங்களும், 2017-18ஆம் ஆண்டு 25.5 லட்ச மரங்களும் வெட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மரங்கள் அனைத்தும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக உரிய அனுமதி பெற்றுதான் வெட்டப்பட்டது என்று மத்திய அரசு பதிலில் கூறியுள்ளது.
அதேசமயம் கடந்த 4ஆண்டுகளில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களுக்கு மரம் நட 237.07 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய மரம் நடும் திட்டத்தின் கீழ் 328.90 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.