பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியுற்றது எனவும் அதை மறைக்கவே அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னையை மீண்டும் பாஜகவினர் முன்னெடுத்து வருவதாகவும் தேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது.
இதையடுத்து பாஜகவினரும் பல்வேறு இந்து அமைப்புகளும் ராமர் கோயில் கட்டுவது குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியுற்றது எனவும் குறிப்பாக மோடி தோற்றுவிட்டார் எனவும் அதை மறைக்கவே அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னையை மீண்டும் பாஜகவினர் முன்னெடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்காகவே பாஜக இந்தப் பிரச்னையை பேசி வருகிறது எனக் குறிப்பிட்ட திக் விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் ஆனால் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டவேண்டும் என நினைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவ்வாறு அந்த இடத்தில்தான் கட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற தீர்ப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.