இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக அதிகப்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன, மத்திய அரசின் புதிய அமைச்சரவைக்கு தடுப்பூசி பற்றாக்குறையை சரிசெய்வதில் எந்தளவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் வரும் ஜூலை 11-ம் தேதிதான் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி இறக்குமதியிருக்கும் என்ற நிலையில், ஜூலை 6 ம் தேதி முதலே பல மாவட்டங்களில் தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தரவுகள் சொல்கின்றன. ஜூலை 5-ம் தேதி கணக்குப்படி, 50,000 டோஸ் தடுப்பூசிகளே மீதமிருப்பதாக தகவல் வெளியாகினது. அடுத்தடுத்த நாள்களில் ஒவ்வொரு நாளும் 20,000 டோஸ்களே இருப்பு உள்ளது என்ற நிலை உருவானது. பற்றாக்குறையை தீர்க்க, ஜூலை 11-க்கு முன்னரேவும் அடுத்த தடுப்பூசி கொள்முதலை தருமாறு மத்திய அரசிடம் கேட்டது தமிழக அரசு. இருப்பினும் தற்போதுவரை அதுபற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால் தமிழகத்தில் பரவலாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுபற்றி ஜூன் 6ம் தேதி தெரிவிக்கையில், “கடந்த ஆட்சியல் 4 லட்ச தடுப்பூசிகள் வீண்டிக்கப்பட்டிருந்தது. தற்போது 1 லட்ச தடுப்பூசிகள் மிச்சப்படுத்தப்பட்டு கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி சென்று நேரில் வலியுறுத்த உள்ளேன்” எனக்கூறினார்.
மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும், தனது அன்றைய பேட்டியில் “மீதமான தடுப்பூசிகளே தற்போது கையிருப்பில் உள்ளது. அடுத்த தடுப்பூசி இறக்குமதிக்கான தேதி ஜூலை 11 தான் என்பதால், அதுவரை தடுப்பூசி இருப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சூழலை உணர்ந்து, குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே தடுப்பூசிகளை தமிழகத்துக்கு தருமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஜூன் 6ம் தேதியேவும் சில மாவட்டங்களில் 10 முதல் 20 தடுப்பூசி டோஸ்களே மீதமுள்ளன என்ற, பத்திரிகை செய்தியொன்று கூறியது. ஜூலை மாதத்துக்கென மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்திருக்கும் டோஸ்கள், 72 லட்சம். இவற்றில் தற்போதுவரை 10 லட்சத்தையொட்டிய தடுப்பூசிகள் மட்டுமே தரப்பட்டுள்ளது. மீதமுள்ள டோஸ்கள் விரைந்து கிடைக்கும்போது, பற்றாக்குறை தடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் இன்று பேசினோம். “அன்றன்று கிடைக்கும் தடுப்பூசிகளையும் மீதமாகும் தடுப்பூசிகளையும் வைத்து, விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். நாளை டெல்லி செல்லவிருக்கிறோம். முன்கூட்டியே தடுப்பூசி கொடுப்பது பற்றி கேட்கவிருக்கிறோம். அவர்கள் அளிக்கவிருக்கும் பதிலில்தான், அடுத்தடுத்த நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டை முழுமையாக தடுப்பது எந்தளவுக்கு சாத்தியமென தெரியும்” என்றார் அவர்.
இந்த தடுப்பூசி பற்றாக்குறை, தமிழ்நாட்டு அளவில் மட்டுமன்றி, இந்திய அளவிலும் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் இந்திய மக்கள் தொகை 136.3 கோடியில் இதுவரை வெறும் 5% பேர் மட்டுமே இருடோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளார்கள். சரி, ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களாவது அதிகமாக இருக்கிரார்களா எனப்பார்த்தால், அப்படியும் இல்லை. ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், சுமார் 22% என்றே இருக்கின்றனர்.
ஒருவேளை இதேநிலை நீடித்தால், மூன்றாவது அலை கொரோனா மிகவிரைவில் ஏற்படுமென கணிக்கின்றனர் அறிவியலாளர்கள். எஸ்.பி.ஐ. சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் மூன்றாவது அலை ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு ஏற்படலாம் என்றும் செப்டம்பரில் அது உச்சத்தை அடையுமென்றும் அப்படி உச்சத்தை தொடும்போது அன்றாடம் இந்தியாவில் 7 லட்சம் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படலாம் என்றும் எனக்கூறப்பட்டுள்ளது. ஒருநாளில் 7 லட்சம் என்பது, இரண்டாவது அலையை விட இரு மடங்கு பாதிப்பை குறிக்கிறது. தடுப்பூசி மட்டுமே இந்த நிலையில் மக்களை காக்குமென அறிவியலாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது எடுத்திருந்தால், தீவிர பாதிப்பை தவிர்க்கலாம் என சொல்கிறார்கள். இறப்பை தடுப்பதிலும், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால், 82% இரு டோஸ் என்றால், 98% இறப்பை தடுக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசியை பெறவே இந்தியாவில் பெரும் போராட்டம் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் பழங்குடி, மலைவாழ் மக்கள் முதல் நகர மக்களை சேர்ந்தவர்களவரை அனைத்து தரப்பினரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஆர்வமாக முன்வரும்போதிலும், அரசால் இதுவரை 1.37 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு நாளும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி விநியோகிக்கும் அளவுக்கு தமிழகத்தில் வளம் இருந்தும்கூட, மிகக்குறைவான நபர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்துகிறோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசியை பொறுத்தவரை, மாநில அரசுகள் மத்திய அரசையே முழுமையாக சார்ந்துள்ளது என்பதால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் அடுத்து என்ன செய்யவிருக்கிறது என நாம் பார்க்கவேண்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் நேற்றைய தினம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருந்தார் ஹர்ஷ் வர்தன். அவருக்கு பதிலாக, அப்பதவிக்கு மோடியின் மாநிலமான குஜராத்தை சேர்ந்த மன்சுக் மாண்டவியா பதவியேற்றார். புதிய அமைச்சரவையின் செயல்பாடு எப்படியிருக்கும் என கணிப்பதற்கு, நம்மிடம் நேரம் இல்லை என்பதால், அவர்களிடமிருந்து விரைவான நடவடிக்கையை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான்! நாளை அவரை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் அழுத்தம், மத்திய அரசின் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தினால், மகிழ்ச்சியே.
மன்சுக் மாண்டவியாவின் முன் இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால், இந்த தடுப்பூசி பற்றாக்குறையை சரிசெய்வதுதான். இதற்கு அடுத்த இடத்தில் கடந்த சில தினங்களாக இந்தியா எதிர்கொண்டுவரும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்தும் சவால், அவருக்கு இருக்கிறது. இவற்றில் தினசரி பாதிப்பு அதிகரித்தமைக்கான காரணமாக, அவசர அவசரமாக இந்தியா இயல்புக்கு திரும்பியதே பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இதுபற்றி கூறும்போது “நாடுகள் அவசர அவசரமாக இயல்புக்கு திரும்புவது ஆபத்தானது. உலகம், டெல்டா வகை கொரோனாவால் மிகப்பெரிய பிரச்னைகளை சந்திவிக்கவிருக்கிறது” என பேசியிருந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலக சுகாதார நிறுவனம், அச்சுறுத்தல் எனசொல்லும் இந்த டெல்டா வகை கொரோனாவைகூட, எளிதாக எதிர்கொள்ளும் திறன் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு சிறப்பாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் ஆய்வொன்று இன்று கூறியுள்ளது. ஆக, முழுமையாக தடுப்பூசி விநியோகம் சீராக இருந்தால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையைக்கண்டு இந்தியா கொஞ்சம் பயப்படாமல் இருக்கலாம். ஆனால், இங்கோ நிலைமையே தலைகீழ். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலையிலும்கூட கோவேக்சின் மீதான தட்டுப்பாடு, இங்கு அதிகமாகவே உள்ளது. கோவேக்சின் மட்டுமன்றி, கோவிஷீல்டுக்கும் தற்போது விநியோகம் முழுமையாக இல்லை. இதையே, கடந்த மூன்று தினங்களாக தமிழக தடுப்பூசி மையங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
கொரோனா இரண்டாவது அலையில் மட்டும், அதிகாரபூர்வமாக இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்கள் 2,50,000. ஒருவேளை இந்தியா உடனடியாக தனது தடுப்பூசி விநியோகத்தை வேகப்படுத்தாவிட்டால், அடுத்த அலைக்கு, இன்னும் அதிக உயிர்களை நாம் இழக்க நேரிடும். உயிரிழப்புகளை தடுக்க, கொரோனாவுக்கு எதிரான ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் குழு நோய் எதிர்ப்பு சக்தியை இந்திய மக்கள் தடுப்பூசி வழியாக பெற வேண்டும். இதற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மத்திய அமைச்சர் உரிய வழிவகைகளை அவசர நிலையில் செய்ய வேண்டும்.
’அவசர நிலையில்’ என குறிப்பிட காரணம், அதிக தொகுதிகள் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில், இன்னும் சில மாதங்கள் தேர்தல் வரவுள்ளது. அதன் பணிகளை, தேர்தல் கூட்டங்களை அரசியல் கட்சிகள் தொடங்கும் முன்பு தடுப்பூசி விநியோகம் அதிகப்படுத்தப்பட்ட வேண்டும். இல்லையெனில், அடுத்த கொரோனா அலைக்கு, அதுவேகூட வித்திடக்கூடும்.
ஒருவேளை குழு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லையெனில், மீண்டும் மீண்டும் பொதுமுடக்கம் – அதனால் பொருளாதார இழப்புகள் – வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு – பள்ளிகள் மூடல் என கடந்த 2 வருடங்களாக இந்தியா சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும், மீண்டுமொரு முறை அரசும் மக்களும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இங்கே மற்றுமொரு சவாலும் அரசுக்கு உள்ளது. அது, அடுத்த அலை கொரோனா, எந்தவகை திரிபால் ஏற்படவிருக்கிறது என்பது. ஒருவேளை அது டெல்டா எனில், தடுப்பூசி அதை அதிகபட்சம் தடுக்கும். ஆனால் வேறு வகை கொரோனா திரிபு என்றால், அதனால் வரும் விளைவுகளை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் எந்தவகை திரிபென்றாலும், தடுப்பூசி போடுபவர்களுக்கு இறப்பு தடுக்கப்படும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆகவே தடுப்பூசி எப்படியாகினும், உயிர்களை காக்கும்.
மோடி தலைமையிலான இந்த புதிய அமைச்சரவை, தங்கள் முன்அனுபவத்தின்வழியாக, முந்தைய அமைச்சரவை செய்த தவறுகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக திருத்திக்கொள்ள தொடங்க வேண்டும். அவற்றில் முதன்மையாக இருப்பது, தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்க வேண்டும். நேற்றுதான் பொறுப்பேற்றுள்ளார் என்பதால், அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதற்கு என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை. எந்தளவுக்கு இவர் துரிதமாக செயல்படுவார் என்பதை, அடுத்தடுத்த நாள்களில் பார்ப்போம்!