மகாராஷ்டிராவில் சூறாவளியுடன் பெய்து வரும் அடைமழையால் மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இன்று மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீள அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கனமழையுடன் சுழற்றியடிக்கும் காற்று; சாலைகளை மூழ்கடித்து பாய்ந்து செல்லும் மழை நீர்; இயல்பு வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டதால் தவிக்கும் பொதுமக்கள். கடந்த ஒரு வாரமாக மும்பையின் நிலைதான் இவை.
மும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளும் மழையையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. சாலைகளில் இடுப்பளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளில் விழுந்து கிடக்கின்றன.
தண்டவாளங்களும் மழைநீரில் மூழ்கடிக்கப்பட்டு, புறநகர் ரயில் சேவை முடங்கியுள்ளது. மும்பையில் உள்ள ஜெ.ஜெ. மருத்துவமனைக்குள்ளே மழைநீர் புகுந்தது. மும்பையில் நேற்று பகலில் மட்டும் 293 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளது. புனே, பால்கர், தானே உள்ளிட்ட பகுதிகளின் நிலையும் இதுதான். மழை வெள்ளம் துயரமாகிவிடாமல் தவிர்க்க, தேசிய பேரிடர் மீட்புப் படை களமிறக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள் தொடரும் நிலையில், மழையின் அளவு இன்று குறைந்துவிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
மழை பாதிப்புகள் குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்வதாகவும் மோடி உறுதியளித்துள்ளதாக உத்தவ் தாக்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.