கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரசாரத்துக்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நான்கு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மூன்று மாவட்டங்களில் நடந்த பிரசார கூட்டங்களை முடித்துவிட்டு, மாலை 6:25 மணிக்கு மைசூரு வந்தார். மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். பின், கன்ஹவுஸ் பகுதியில் இருந்து 6:40 மணிக்கு திறந்த வேனில் பேரணியாக புறப்பட்டார். அவருடன் பாஜ மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ராமதாஸ் இருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளும் பின்புறம் நின்றிருந்தனர்.
திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று, 'மோடி மோடி' என கோஷம் எழுப்பி வரவேற்றனர். மைசூரு தசரா விழாவின் ஜம்பு சவாரி செல்லும் ராஜ வீதியில் பேரணி சென்றது.
மக்கள் அவர் மீது மலர்கள் துாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சின்ன கடிகாரம் பகுதி அருகே மோடியின் வாகனம் 7:30 மணிக்கு வந்த போது மலர்களுடன் சேர்த்து ஒரு மொபைல் போனும் மோடியை நோக்கி வீசப்பட்டது. பறந்து சென்ற அந்த மொபைல் போன் பிரதமர் மீது படாமல் வேனின் மேற்கூரையில் விழுந்தது. இதைப் பார்த்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி பயணித்த வாகனம் மீது செல்போன் வீசியது யார் என்று காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் பிரதமரின் வாகனம் மீது செல்போன் வீசியது பெண் என்பதும், அவர் பாஜகவில் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. இதுபற்றி கர்நாடாக காவல்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில்,'பிரதமர் வாகனத்தின் மீது செல்போன் வீசிய பெண் எந்த தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. பிரதமரை பார்த்த உற்சாகத்தில் அவர் இருந்த நிலையில் செல்போன் தவறி பறந்து வந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.