கர்நாடக மாநிலம் மைசூரில் போக்குவரத்து காவலர் ஒருவருக்கு மக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
திங்களன்று மைசூர் ரிங் ரோடு சந்திப்பிற்கு அருகே உள்ள போலீஸ் செக் போஸ்டில் பணியில் இருந்த காவலர் ஒருவர் பைக்கில் சென்றவர்களை மடக்கியுள்ளார். அப்போது அந்த வழியாக பைக் ஓட்டி வந்த தேவராஜ் என்ற நபர், காவலர் தடுத்த காரணத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அதனால் ஆவேசமடைந்த மக்கள் சம்பந்தப்பட்ட காவலருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை ஓட்டுநர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
“வழக்கமான சோதனையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்தவர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது” என மைசூர் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
காவலர்களை தாக்கியவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளான காவலர் புகார் கொடுத்துள்ளனர்.