குருகிராமில் பிபிஓ, ஐடி ஊழியர்களை ஜூலை மாதம் இறுதிவரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவிலுள்ள குருகிராம் நகரத்தில் ஏராளமான பிபிஓ, ஐடி மற்றும் கார்பரேட் கம்பேனிகள் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக இந்த கம்பெனிகளின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என கடந்த மார்ச் மாதம் அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் குருகிராமில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை ஜூலை நீட்டிக்குமாறு அரசின் கூடுதல் செயலரும், குருகிராம் நகரத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள வி.எஸ்.குன்டு பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, பிபிஓ, ஐடி மற்றும் சர்வதேச கம்பெனிகள், பணியாளர்களை ஜூலை வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இது சாத்தியமாகாத போதிலும், முடிந்தவரை அங்கும் இதனை அமல்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர கட்டுமானப் பணி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டி.எல்.எஃப் உள்ளிட்ட பெரும் கட்டுமான நிறுவனங்களும் இது பொருந்தும் எனப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிபுரிபவர்களும் சமூக இடைவெளியுடன் பணிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.