ஆந்திர மாநிலத்தில் உள்ள தடிகொண்டா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஸ்ரீதேவி, அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர். சில நாட்களுக்கு முன்பு குண்டூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பிடுகுரல்லா என்ற இடத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயம்பட்ட நிலையில் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற யாரும் கொரோனா பரவும் என்ற சந்தேகத்தில் அவருக்கு உதவி செய்யவில்லை.
அப்போது காரில் வந்த எம்எல்ஏ ஸ்ரீதேவி, சாலையில் காயம்பட்டுக் கிடந்த மனிதரைப் பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தி முதலுதவி செய்தார். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
"உள்ளூர் மக்கள் கொரோனா வைரஸ் பரவும் என்ற பயத்திலேயே காயம்பட்டவருக்கு சிறு உதவி செய்யக்கூட முயற்சி செய்யவில்லை. உடனே என் வாகனத்தை நிறுத்தி, கையுறை மற்றும் முக்ககவசம் அணிந்துகொண்டு அவருடைய நாடித்துடிப்பை பரிசோதனை செய்தேன்" என்று செய்தியாளர்களிடம் எம்எல்ஏ ஸ்ரீதேவி தெரிவித்தார்.