சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ: வைரல் வீடியோ
கேரளாவில் 3 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்பதற்காக சுங்கச்சாவடியை எம்எல்ஏ ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ பிசி ஜார்ஜ். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரிசூரில் உள்ள பலியேக்கார சுங்கச்சாவடி வழியாக செல்ல வேண்டியதால் அங்கு சென்றிருக்கிறார். அப்போது, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ ஜார்ஜ் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் எம்எல்ஏவுடன் வந்த நபர்களும், சுங்கச்சாவடியில் பணியில் இருந்த நபர்களை மிரட்டும் தொனியிலும் கை நீட்டி பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுங்கச்சாவடி அதிகாரிகள் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தான் செய்ததை நியாயப்படுத்தி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் எம்எல்ஏ ஜார்ஜ். இதுதொடர்பாக பேசிய அவர், “எம்எல்ஏக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது சுங்கச்சாவடியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். என் காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர் இருப்பதை அங்கிருந்த ஒருவர் பார்த்தார். நான் எம்எல்ஏ என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது. ஆனாலும் என்னை அவர்கள் விடவில்லை. அதேநேரம் எனக்குப் பின்னால் வண்டியில் நின்றவர்கள் தொடர்ச்சியாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் எனக்கு அதிக எரிச்சல் உண்டாகிவிட்டது. ஆனால் சுங்கச்சாடியில் இருந்தவர்கள் என்னை போக விடாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தனர். இதுபோன்று மீண்டும் நடந்தாலும் நான் சுங்கச்சாவடியை உடைப்பேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் அவசரமாக ஒரு ரயிலை பிடிக்க நான் வேகமாக சென்றுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அவர்கள் 3 நிமிடம் காத்திருக்குமாறு கூறினர். தொடர்ச்சியாக பின்னால் இருந்து மற்றவர்கள் ஒலி எழுப்பியதால் உடைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளார்.