கட்டாய பாடமாக வைத்து யோகாவை திணிப்பது தங்களது மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அமைவதாக கூறி மிசோரம் ஹிந்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி ஷிக்ஷன் பிரவீன் (தொடக்கக் கல்வியில் டிப்ளமோ) மற்றும் ஹிந்தி ஷிக்ஷன் பரங்காத் ஆகிய ஹிந்தி பாடப்பிரிவில் யோகாவை கட்டாய பாடமாக அறிவுறுத்தியதை அடுத்து இந்தப் போராட்டத்தினை அக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், யோகாவை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று திணிப்பதாகவும், இவை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமான மிசோரத்தில் உள்ளவர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.
மேலும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் திடீரென அறிமுகம் செய்யப்பட்ட யோகாவால் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைவதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், மிசோ ஹிந்தி மாணவர்களின் அமைப்பின் தலைவர் இது குறித்து கூறுகையில்,’ கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மிசோரமில் உள்ள மக்களின் மத நம்பிக்கைகளுக்கு யோகா எதிரானது. எங்களின் கோரிக்கையை கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தானுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். ஆனால் இது ஒரு கட்டாய பாடமாக வகைப்படுத்தப்பட்டாலும், மாணவர்களுக்கு யோகாவுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அது அவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் முடிவுகளை பாதிக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்து மாணவர்கள் போராட்டத்தின முடித்து விட்டனர்.