இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து நேற்று பல போர்க்கப்பல்களுடன் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மாபெரும் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார், இந்த அஸ்திரத்திற்கு 'திவ்யாஸ்திரம்' என்றும் பெயரிட்டார்.
இந்த திவ்யாஸ்திரத்திற்கு பின்னால் ஒரு பெண் விஞ்ஞானி இருந்திருக்கிறார். யார் அந்த பெண் விஞ்ஞானி என்பதை பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாக பிரிவில் பணியாற்றி வரும் பெண் விஞ்ஞானி ஷீனா ராணி. இவரது கணவர், பிஎஸ்ஆர்எஸ் சாஸ்திரி, இவரும், டிஆர்டிஓ ( DRDO ) ஏவுகணைகளில் பணிபுரிந்தவர். மேலும் இவர் 2019ல் இஸ்ரோவால் ஏவப்பட்ட கௌடில்யா செயற்கைக்கோளின் பொறுப்பாளராகவும் செயலாற்றியவர்.
ஷீனா ராணி. 1999 ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணை அமைப்புகளில் பணிபுரிந்து வருகிறார். ’ஆற்றலின் ஆற்றல் மையம்’ என்று அழைக்கப்படும் இவருக்கு 57 வயது . 1998 முதல் இவர் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகத்தில் (டிஆர்டிஓ) DRDO விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியர் படித்தவர். கணினி மற்றும் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றவர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இந்தியாவின் முதன்மையான சிவில் ராக்கெட்டிரி ஆய்வகத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, 1999 முதல், ராணி முழு அக்னி தொடர் ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகளில் பணியாற்றி வருகிறார்.
இவரைப்பற்றி இவருடன் பணியாற்றி வரும் டாக்டர் அவினாஷ் சந்தர் கூறுகையில், ”டாக்டர் சந்தர் ஷீனா ராணி எப்பொழுதும் சிரித்தபடி இருப்பவர். அவருக்கு புதிது புதிதாக ஏதாவது உருவாக்கவேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அக்னி ஏவுகணை திட்டத்திற்கான இவரது அர்ப்பணிப்பு அதி அற்புதமானது. இதில் நேற்றைய ஏவுகணை சோதனை அவருக்கு மகுடமாக அமைந்துள்ளது.” என்று கூறியிருக்கிறார்.
நேற்று பரிசோதனை செய்யப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை DRDO உறுதிப்படுத்தியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'மிஷன் திவ்யஸ்த்ரா' என்ற பெயரிடப்பட்ட இச் சோதனை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.