உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ராடிபல் சிங் - பானுமதி. இவர்களுக்கு பிங்கு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், சிறுவயதில் மகன் பிங்கு கோலி குண்டு விளையாடியதால் பெற்றோர் இருவரும் அவனை கண்டித்துள்ளனர். இதனால், கோபித்துக்கொண்ட பிங்கு, கடந்த 2002ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அப்போது அந்த சிறுவனுக்கு வயது வெறும் 11 மட்டுமே.
தாய் நீண்ட ஆண்டுகளாக தேடியும் மகன் கிடைக்காததால், குடும்பத்தார் விரக்தியில் இருந்தனர். இதற்கிடையே, பிங்கு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளதாக அவர்களது ஊர் மக்கள், பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதனால், ஆச்சரியத்துடன் ஓடி வந்து மகனை பார்த்துள்ளார் தாய் பானுமதி. 11 வயதில் விளையாட்டுப்பிள்ளையாக வீட்டைவிட்டு வெளியேறிய மகன், 22 ஆண்டுகளுக்குப் பிறகு துறவியாக மாறி வந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.
மேலும், அவர் பிங்குதானா என்பதை கண்டறிய, வயிற்றுப்பகுதியில் இருந்த தழும்பை அடையாளமாக பார்த்துள்ளனர். இறுதியில் வந்தது தங்கள் மகன் பிங்குதான் என்பது தெரிந்தவுடன், பெற்றோர் இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனை சந்தித்துவிட்டோமே என்ற சந்தோஷத்தில் வீட்டுக்கு அழைத்தபோது, பிங்குவை அவர் சார்ந்த குழு அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. 11 லட்சம் ரூபாயை கொடுத்தால் மட்டுமே பிங்குவை தங்களது அணியில் இருந்து வெளியே அனுப்புவோம் என்று கூறியுள்ளனர். தாய், தந்தையை பார்த்தவுடன், பிங்கு தனது கையில் இருந்த சாரங்கியை வாசித்தபடி ஆன்மீக பாடலையும் பாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிங்குவின் தந்தை ராடிபல், ”எனது பாக்கெட்டில் 11 லட்சம் ரூபாய் எல்லாம் கிடையாது. நான் எப்படி அத்தனை லட்சத்தை கொடுப்பேன்” என்று குமுறியுள்ளார். இதற்கிடையே, தனது தந்தையிடம் பேசிய பிங்கு, தனது ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாகவே உங்களை பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு, அவர்களது முறைப்படி தாயாரிடம் தானம் பெற்றுக்கொண்டு கிளம்பியுள்ளார். இதற்கிடையே, உணர்ச்சிகரமான பெற்றோர், மகனது வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.