இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் மே 3-ஆம் தேதிக்கு பிறகும் மேலும் நீட்டிக்கப்படலாம் என சூசகமாக கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாட்டின் பல மாவட்டங்களில் கணிசமான தளர்வுகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் பொதுமுடக்கத்தால் நிலவும் சூழல் குறித்து விரிவான விவாதங்களை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், முழு முடக்கத்திற்கு நாடு முழுவதும் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு கணிசமான சலுகைகளை வழங்கும் புதிய நெறிமுறைகள் வரும் 4ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் கிடைத்துள்ள பலன்களை இழந்துவிடாத வகையில் வரும் 3ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே தெலங்கான அரசு பொதுமுடக்கத்தை மே மாதம் 7-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பஞ்சாப் அரசும் பொதுமுடக்கத்தை மே 3-ஆம் தேதிக்கு பிறகும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது முடக்கத்தை நீட்டிக்கவேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.