இலங்கையில் இருந்து கடந்த 6 மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தந்தவர்களின் விவரங்களை பாதுகாப்பு முகமைகள் ஆய்வு செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 21-ஆம் ஈஸ்டர் திருநாளில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் துயரத்தில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. வெடிகுண்டு தாக்குதலால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் இலங்கை செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய உள்ளிட்ட அரசுகள் எச்சரிக்கை விடுத்தது.
இதனிடையே இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியா வந்து பயிற்சி பெற்று சென்றதாக இலங்கை ராணுவ தளபதி கூறியிருந்தார். இந்த சூழலில், கடந்த 6 மாதங்களில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், கேரளா,பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வந்தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 6 மாதங்களில் இலங்கையை சேர்ந்த 25 பேர் காஷ்மீருக்கு வருகை தந்திருப்பதாகவும் அவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.