கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் கடந்த 2022-ம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது.
அதேபோல், கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்தும் அவர்களை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்தாண்டு விடுவித்தது.
இருப்பினும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். முடிவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ரத்து செய்த ஆனந்த் வெங்கடேஷ், தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்குகளை தினந்தோறும் விசாரிக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஆணையிட்டார்.
இதனை எதிர்த்து வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முறைகளை, சென்னை உயர்நீதிமன்றம் முறையாக பின்பற்றவில்லை என அமைச்சர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்குகளை, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க முடியும் என்பது விதிமுறை எனவும், அந்த விதிமுறையை ஆனந்த் வெங்கடேஷ் மீறி இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வழக்குகளை முடித்து வைப்பது தொடர்பான தங்களது ஆவணங்கள் எதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுக்கள் மீது தமிழ்நாடு அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
மேலும், அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதித்தனர். இதனால் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு, இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.