சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை என்றும், தேவையில்லாமல் வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்துக் கொள்வதைப் போன்றது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை. அனைத்து உயிர்களும் தற்போது முக்கியம். சாதி, மதம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை. வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்துக் கொள்வதைப் போன்றது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தினரால் கொரோனா வைரஸ் பரவுவதாகத் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கேட்டுக்கொண்டுள்ளார். நாடே நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தில் மத ரீதியாக பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் அனைவரும் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கொரோனா பேரழிவு நேரத்தில் குறிப்பிட்ட மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனா பரவுவது தொடர்பாக டெல்லியில் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பற்றியும், குறிப்பிட்ட மதத்தைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு பிரிவினையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
இதே விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன், கொரோனா வைரஸ் பரவுவதில் அரசியல், மத பிரச்னைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள் முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.