இதுபோன்ற கொடூரமான செயல்கள் செய்வது இந்தியக் கலாச்சாரமல்ல என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய அந்த யானை, மனிதர்கள் கொடுத்த உணவுகளை உண்டுள்ளது. கருவுற்றிருந்த அந்த யானைக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதை யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்திருக்கிறது. இதனால் வாய் மற்றும் நாக்கில் பலத்தைக் காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.
ஆனாலும் எந்த மனிதரையும் தாக்காமல், எந்த வீட்டையும் சேதப்படுத்தாமல் அந்த யானை சென்றிருக்கிறது. பசி அதிகமாக இருந்ததால் எதையாவது உண்ணலாம் என யானை நினைத்த போதும், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர்.
சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இந்தத் தகவலை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சோகத்துடன் பகிர்ந்தார். உடனே யானையைக் கொன்றவர்களுக்கு உரியத் தண்டனையைக் கொடுக்க வேண்டும் எனப் பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்தனர். உயிரிழந்த பெண் யானைக்கு 15 வயதாகிறது. இந்த யானைக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.
இது குறித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் "இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பான குற்றவாளிகளைத் தப்பவிடமாட்டோம். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. உணவில் வெடி மருந்தைக் கலந்து கொடுத்து உயிரைக்கொல்வது, நமது இந்தியக் கலாச்சாரத்திலேயே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.