பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்திருந்தார். இதுகுறித்து கடந்த இரு நாட்களாக டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய காரிய குழு கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர். அந்த உரையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் மொழிபெயர்த்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயிலின் பிரான பிரதிஷ்டா விழாவுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் ஸ்ரீரங்கத்திலுள்ள ஆலயங்களுக்கு சென்று தான் வழிபாடு செய்ததை பிரதமர் நினைவுகூறினார்.
இத்தோடு “800 வருடங்களுக்கு முன்பு கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த மண்டபத்திலேயே (ஸ்ரீரங்கத்தை குறிப்பிட்டு) கம்பராமாயணத்தை கேட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” எனக்கூறி, தனது தமிழ்நாட்டு பயணம் குறித்து பேசியிருந்தார் பிரதமர்.
(முன்னதாக கடந்த மாதம் தென்னிந்தியாவின் குருவாயூர், லேபாக்ஷி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆலயங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் ஆகிய இடங்களில் வழிபாடு செய்த பிறகே பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் ஆலய விழாவில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தரையில் படுத்து உறங்கி, இளநீர் மட்டுமே உட்கொண்டு பிரதமர் மோடி விரதம் இருந்திருந்தார் என கூறப்பட்டது)
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், " ‘800 வருடங்களுக்கு முன் எந்த மண்டபத்தில் கம்பர் தனது ராமயணத்தை அரங்கேற்றம் செய்தாரோ, அதே இடத்தில், கம்பனின் ராமாயணத்தை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த அனுபவத்தை வர்ணிப்பது கடினம். அந்த உணர்ச்சி தனிதொரு உலகம்’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்று மொழிபெயர்த்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தன் பதிவில், “அது (கம்பராமாயணத்தை கேட்டது) எனக்கு ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ நினைவூட்டியது” என பிரதமர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர். தனது அந்த உரையில் அயோத்தி ராமர் கோயிலையும், கம்பர் பாடியுள்ள ராமாயணத்தையும் போற்றி குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி.
நிதியமைச்சரின் இன்னொரு பதிவில், பிரதமர் கூறியதாக - "அயோத்தி ராமர் கோவில் செல்லும் முன், நான் ஒரு சாதாரண மனிதனாக, ஶ்ரீராமருடன் தொடர்புடைய கோவில்கள் - நாஸிக், குருவாயூர், லேபாக்ஷி, ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி சென்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி நிர்மலா சீதாராமன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசியதை பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் கவனத்துடன் கேட்டனர்.
டெல்லி பாரத் மண்டபம் அரங்கில் நடைபெற்ற இந்த பாஜக கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.