’இஸ்லாமிய வங்கி’ என்ற பெயரில் போன்சி திட்டம் ஒன்றை இயற்றுவதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை-மகனை காப்பாற்ற முயன்றதாக கூறி பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பரீத். இவர் பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றுவதாக கூறி பரீத்திடம் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரூ.20.50 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ’பொன்சி திட்டம்’ தொடர்பாக ஒரு அமலாக்க இயக்குனரக அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக ஜனார்த்தன ரெட்டி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் ஜனார்தன ரெட்டி முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணைக்காக மத்திய குற்றக்கிளை அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜாராகமல் ஜனார்தன ரெட்டி இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஜனார்தன ரெட்டி தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மத்திய குற்றக்கிளை போலீசாரின் முன்பு அவர் ஆஜரானார். இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே நேற்று ரெட்டி மற்றும் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில், பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், ரெட்டிக்கு தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்த வழக்கு அவர்மேல் வீணாக போடப்படும் ’அரசியல் சதி’ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொன்சி திட்டம் தொடர்பாக ஒரு அமலாக்க இயக்குனரக அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக ஜனார்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜனார்தன ரெட்டியின் நெருங்கிய உறவினரான அலி கான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சாட்சிகள் அளித்த நம்பகத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் ரெட்டியை கைது செய்ய முடிவு எடுத்ததாகவும் பணம் மீட்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும் எனவும் மத்திய குற்றக்கிளை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.