டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா இன்று கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகும் சூழல் நிலவுவதால், சிபிஐ தலைமையகம் முன்பு டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய கலால் வரி கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டுமென கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் டெல்லி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், மாற்றுத் தேதி வழங்கப்பட வேண்டும் என மணிஷ் சிசோடியா கோரிக்கை வைத்தார். அதன்படி அன்றைக்கு பதிலாக, இன்று ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை மணி சிசோடியா ஆஜராகவுள்ள நிலையில், டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு முன்பு, டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில், சாலையின் குறுக்கே துணை ராணுவ படையின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.