தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ ரமேஷ் சென்னமாநேனியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவின் வெமுலாவாடா தொகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆளும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னமாநேனி. இவரது குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், எம்.எல்.ஏ ரமேஷ் எவ்வித குற்றச்செயலையும் செய்யவில்லை என்றும் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றால், தகவலை மறைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டில்தான்.
இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த முன்பாக ஓராண்டுக்கு மேல் அவர் இந்தியாவுக்குள் இல்லை என்றும் அதனால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக எம்.எல்.ஏ ரமேஷ் கூறியுள்ளார்.